அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இப்ராகிம் கலீல் தலைமை தாங்கினார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் முகமது யாசர் வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா தொடங்கி வைத்து பேசினார். ஐகோர்ட்டு வக்கீல் ஜெய்னுலாபுதீன் கண்டன உரையாற்றினார். துணை தலைவர் அகமது பைசல், பொருளாளர் தஸ்தகிர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் நசிருதீன், செயலாளர் அப்பாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிக், எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஜாபர்சாதிக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

தடைவிதிக்கக்கூடாது

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், '15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சமூகப்பணியை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள சட்டவிதிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்ட கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற சட்டவிதிமுறையை சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.

பள்ளிவாசல் செயல்பட தடைவிதிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பை வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். இந்த மனுவை முதல்-அமைச்சருக்கும் அனுப்பி வைக்க கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதுபோல் மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story