கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்கு


கடலூர் மாவட்டம் முழுவதும்  வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை  அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று வெடி மருந்து குடோன்கள் செயல்படுகிறதா? என்றும், வெடி மருந்து தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள வெடி மருந்து குடோன்கள், பட்டாசு விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் வெடி மருந்து தயாரிக்கும் இடங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், புதுச்சத்திரத்தில் உள்ள வெடிமருந்து குடோனிலும், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் சேத்தியாத்தோப்பில் உள்ள வெடிமருந்து குடோனிலும், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மந்தாரக்குப்பம் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர்.

வெடிகள் பறிமுதல்

இதேபோல் போலீசார் ரெட்டிச்சாவடி, மேட்டுக்குப்பம், அண்ணாமலை நகர், சிதம்பரம், விருத்தாசலம் புதுகூரைபேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, முத்தாண்டிக்குப்பம், செம்மங்குப்பம், திட்டக்குடி, வேப்பூர், நல்லூர் என மாவட்டம் முழுவதும் உள்ள 25 வெடிபொருள் தயாரிக்கும் இடங்கள், 20 வெடிபொருள் சேமிக்கும் குடோன்கள், 8 பட்டாசு கடைகளில் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் திட்டக்குடியில் உள்ள ஒரு மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திட்டக்குடி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (வயது 45) என்பவர், வேறொரு இடத்தில் வெடி விற்பனை செய்ய அனுமதி பெற்று, முறைகேடாக பெட்டிக்கடையில் வெடிகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இளவரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகளை பறிமுதல் செய்தனர்.


Next Story