தமிழகம் முழுவதும் ரூ.3,200 கோடியில் விவசாயிகளுக்கு பாசனம் திட்டம் - சட்டசபை ஏடுகள் குழுவினர் தகவல்
தமிழகம் முழுவதும் ரூ.3,200 கோடியில் விவசாயிகளுக்கு பாசனம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபை ஏடுகள் குழுவினர் தெரிவித்தனர்.
ஊட்டி
தமிழகம் முழுவதும் ரூ.3,200 கோடியில் விவசாயிகளுக்கு பாசனம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபை ஏடுகள் குழுவினர் தெரிவித்தனர்.
ஆய்வுக்கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டசபை பேரவை, பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் (கம்பம்) தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் செயலாளர் த.தே.நாகராஜன் (பதிப்பாளர்), உறுப்பினர்கள் நல்லதம்பி, பொன்னுசாமி, அப்துல்வஹாப், தேன்மொழி மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சட்டசபை பேரவை ஏடுகள் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, எரிசக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் ஆகியவற்றின் ஆண்டு அறிக்கை சமர்பிக்கப்படாததற்காக காரணம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
பாசன திட்டம்
மின்சாரத்துறையின் சார்பில், ஹைட்ரோநீர் ஆதாரம், சோலார், வாயு, காற்று, மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமானது தேவைப்படுகிறது. உணவு உற்பத்தியினை அதிக அளவில் பெருக்குவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதுமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,200 கோடி திட்ட மதிப்பீட்டில் 2.13 ஆயிரம் ஹெக்டர் பாசன வசதி பெறும் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 1.93 லட்சம் வீட்டிற்கான மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்காக 899 மெகா வாட் மின்சாரமும், தமிழ்நாட்டிலே 7 லட்சம் மெகா வாட் மின்சாரமும், விவசாயிகளுக்காக 1,856 மெகா வாட் மின்சாரமும் என மொத்தம் 21.23 லட்சம் மெகா வாட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆய்வு
தமிழகத்திற்கு உணவு உற்பத்தியில் ஆதாரமாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, செயல்படும் திட்டம் பாராட்டக்கூடியதாகும் மேலும் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைந்து அந்தத்துறை மூலம் என்னென்ன காரியங்களை மக்களுக்கு செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்து வரும் மாவட்ட கலெக்டர் க்கு என் சார்பிலும், குழு உறுப்பினர்கள் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பைக்காரா இறுதிநிலை நீர் மின்திட்டம் (உற்பத்தி செய்யும் திறன்) நிலையம், மாயார் நீர் மின் நிலையத்தை சட்டசபை ஏடுகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ,, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.