பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் பேட்டி
பா.ஜ.க. அரசை வீழ்த்த அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும் என மதுரையில் எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் கூறினார்.
பா.ஜ.க. அரசை வீழ்த்த அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும் என மதுரையில் எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் கூறினார்.
தலைவர்கள் சங்கமம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சங்கமிக்கும் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் நஜ்மா பேகம் வரவேற்றார். மாநில செயலாளர் சித்திக், மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி, மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது நாட்டில் வளர்ச்சியை கொண்டு வருவோம், கருப்பு பணத்தை ஒழிப்போம் என கூறினர். ஆனால், தற்போது வரை அதனை செய்யவில்லை. அரசியல் எதிரிகளை அழிக்க, அமலாக்கத்துறை, ஐ.டி., என்.ஐ.ஏ. போன்ற துறைகளை மத்திய அரசு பயன்படுத்தி கொள்கிறது. நாடாளுமன்றத்தில், மோடிக்கும்- அதானிக்கும் இடையிலான தொடர்பு என்ன, உறவு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், அதுபற்றி பிரதமர் நாடாளுமன்றத்தில் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் சிறிய கட்சி, பெரிய கட்சி என்றில்லாமல் அனைத்து கட்சியினரும் பாகுபாடின்றி ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு திரண்டால் பா.ஜ.க.வை தேர்தல் மூலம் வீழ்த்தி விடலாம்.
தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. ராணுவ வீரர்களை அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு எதிராக திசைதிருப்பும் வகையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இதனை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.