விழுப்புரத்தில்அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டம்


விழுப்புரத்தில்அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


சென்னை, விழுப்புரத்தில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதை கண்டிக்கும் வகையில் விழுப்புரம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் துரைரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை பா.ஜ.க.வினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள முடியாமல் அமலாக்கத்துறை மூலம் ஏவி வருகிறது. இந்த மலிவான அரசியல் செய்வதை பா.ஜ.க. கைவிட வேண்டும். அகில இந்திய அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார். இதனை திசைதிருப்புவதற்காக அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தியுள்ளது என்றார் அவர்.


Next Story