அனைத்து அரசியல் கட்சி கொடிகளைஇறக்கி நூதன போராட்டம் -லாலாபேட்டையில் பரபரப்பு


அனைத்து அரசியல் கட்சி கொடிகளைஇறக்கி நூதன போராட்டம் -லாலாபேட்டையில் பரபரப்பு
x

லாலாப்பேட்டையில் ஊராட்சி எல்லைகளை வரைமுறைப்படுத்தக்கோரி அனைத்து கட்சி கொடிக்கம்பங்களிலிருந்து கொடிகளை கீழே இறக்கி அரசியல்கட்சியினர் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை,

லாலாப்பேட்டையில் ஊராட்சி எல்லைகளை வரைமுறைப்படுத்தக்கோரி அனைத்து கட்சி கொடிக்கம்பங்களிலிருந்து கொடிகளை கீழே இறக்கி அரசியல்கட்சியினர் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 கிராம பிரச்சினை

ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் மற்றும் லாலாபேட்டை ஆகிய இரண்டு ஊராட்சிகளின் நிர்வாக மற்றும் எல்லை பிரச்சனை தொடர்பாக இரு கிராமத்தினரிடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கடந்த சில மாத காலமாக 2 கிராம மக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 2 கிராம ஊராட்சி நிர்வாகத்தினரை அழைத்து கடந்த சில நாட்களுக்கு முன் அழைத்து உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இரண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சி எல்லைகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளின் மூலம் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அதற்கான தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது.

கொடிகளை இறக்கினர்

இந்த நிலையில் லாலாபேட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தையும் அனைத்து அரசியல் கட்சிகளையும் கண்டிக்கும் விதமாக நேற்று லாலாப்பேட்டை சாவடி அருகே இருந்த அரசியல் கட்சி கொடிகளை கொடிக்கம்பங்களில் இருந்து கீழே இறக்கி விட்டு கருப்பு கொடி ஏற்றப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் கட்சி கொடிகளை கம்பங்களில் இருந்து இறக்கி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.


Related Tags :
Next Story