மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்


மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

வங்கக்கடலில் உருவாகும் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப்படையினர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமேசுவரன் தலைமையில் வந்துள்ளனர். இக்குழுவினர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் மீட்பு உபகரணங்களுடன் முகாமிட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன், காகுப்பத்தில் தயார் நிலையில் இருக்கும் மீட்பு உபகரணங்கள், நவீன கருவிகளை பார்வையிட்டு அங்கிருந்த பேரிடர் மீட்புப்படையினருடன் உரையாடினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து தாலுகாக்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 40 கி.மீ. கடலோரப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 19 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் அதிகப்படியான பாதிப்பு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை எதிர்கொள்ளும் வகையில் 12 புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

1,091 தற்காலிக நிவாரண மையங்கள்

மேலும் புயல் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அளிக்கவும், மையங்கள் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் 1,091 தற்காலிக நிவாரண மையங்களும் தயார் நிலையில் உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் வந்துள்ளனர். இக்குழுவில் 40 வீரர்கள் பணியில் உள்ளனர். அதிக கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக, புது மற்றும் உயர்ரக உபகரணங்களுடன் மீட்புப்படையினர் வந்துள்ளனர். கனமழை அதிகம் பெய்யக்கூடிய இடங்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பெரும்பகுதி மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். எஞ்சிய குழுவினர் மட்டும் இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டு, வேறு ஏதேனும் பகுதிகளில் மழை பாதிப்பு இருப்பின் உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலோரப்பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனமழை மற்றும் புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. துணை ஆட்சியர் நிலையில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலர்களும் பணியிலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது முடிவு செய்யப்படும். இன்று (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story