கடலூரில் கூட்டுறவு கடன் சங்கஓய்வுபெற்ற அனைத்து பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
கடலூரில் கூட்டுறவு கடன் சங்க ஓய்வுபெற்ற அனைத்து பணியாளர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஓய்வுபெற்ற அனைத்து பணியாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுராம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலாயுதம், துணை தலைவர்கள் ஜோதி நாதன், இளங்கோவன், இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் சேகர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ஓய்வுபெற்று பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பட்டியலில் பெயர் இருந்தும் ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமல் விடுபட்டுள்ள பணியாளர்களை பரிந்துரை செய்து, ஓய்வூதியம் பெற்ற தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 2021-க்கு பிறகு ஓய்வுபெற்றுள்ள அனைத்து பணியாளர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.