அனைத்து ஆறுகளிலும் முழுஅளவில் தண்ணீர் திறக்க வேண்டும்


அனைத்து ஆறுகளிலும்  முழுஅளவில் தண்ணீர் திறக்க வேண்டும்
x

பூதலூர் வட்டாரத்தில் குறுவை நெற்பயிரை காக்க அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் வட்டாரத்தில் குறுவை நெற்பயிரை காக்க அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேட்டூர் அணை

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்து, கல்லணையிலிருந்து ஜூன் 16-ந் தேதி காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில் திறந்து விடப்பட்டது. கல்லணையின் தலைப்பு பகுதியில் உள்ள பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளது.

கல்லணையில் இருந்து ஜூன் 26-ந் தேதியில் இருந்து முறை பாசன முறை முன்னறிவிப்பின்றி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடான சூழ்நிலையிலேயே குறுவை நடவுப் பணிகளை முடித்தனர்.

வயல்களில் வெடிப்பு

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதியில் இருந்து கல்லணையில் இருந்து முறை பாசனம் அமல்படுத்தப்படும் போது 5 நாட்களுக்கு காவிரியிலும், வெண்ணாற்றிலும் 5 நாட்களுக்கு தண்ணீர் முழுமையாக நிறுத்தப்படுகிறது. கல்லணை கால்வாயிலும் குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பூதலூர் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் இன்றி வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், வெடிப்பு ஏற்பட்டுள்ள வயல்களை பார்த்து கவலை அடைந்துள்ளனர். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய தண்ணீரை பெற்று இருந்தால் குறுவை சாகுபடி நல்ல முறையில் செய்திருக்கலாம்.

முழு அளவில் தண்ணீர் திறக்க வேண்டும்

கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்தால் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாயில் என அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விட்டு கருகி வரும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வள ஆதாரத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story