சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
உடுமலை
உடுமலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
உடுமலையில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சாலைபகுதிகளில் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்துவது, கடைகளை சாலைவரை நீட்டித்து வைப்பது போன்றவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ. .ஜஸ்வந்த்கண்ணன் தலைமை தாங்கி பேசினார். நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நகராட்சி நகரமைப்புபிரிவு, பொறியியல்பிரிவு, சுகாதாரப்பிரிவு அதிகாரிகள், வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உடுமலை நகராட்சி பகுதியில், மாணிக்கம் வீதி வழியாக சென்று தளிசாலையில் உள்ள மேம்பாலத்தை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டுவதற்கு கருத்துரு அனுப்புவது. நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையின் நடுவில் சேகரமாகியுள்ள மண் குவியல்களை அகற்றுவது. சத்திரம் வீதி நகராட்சி பள்ளி முதல், பழனி சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிப்பது. தளி சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கத்திற்கு நிலம்கையகப்படுத்தியுள்ளதை நில அளவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்வது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது.அனைத்து பகுதிகளிலும் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை இடம் மாற்றி அமைப்பது.
ஆக்கிரமிப்புகள்
பழனி சாலையில் இருந்து ராஜலட்சுமி நகருக்கு செல்லும் சாலையில்தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது.ரெயில்நிலையம் முன் உள்ள 40அடி திட்டசாலையில் ஆக்கிரமிப்பு மற்றும் கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது.உடுமலை கச்சேரி வீதி, சத்திரம்வீதி, பசுபதிவீதி,
சீனிவாசவீதி, கல்பனாரோடு, வ.உ.சி.வீதி, வெங்கடகிருஷ்ணா சாலை, ஆகிய சாலைகளில் பார்சல் சர்வீஸ் லாரிகள் நகர பகுதிக்குள் நுழைவதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்வது.கச்சேரி வீதி, கல்பனா ரோடு மற்றும் பை-பாஸ் சாலை ஆகிய சாலைகளில் ஒருபுறம் மட்டும்வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது.வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனம் நிறுத்துமிடத்தை தேர்வு செய்வது.
கச்சேரி வீதி, தளி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றி அமைப்பது. .உழவர் சந்தைக்கு முன்புறபுள்ள தற்காலிக கடைகளை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைக்க மாற்று இடம்வழங்குவது. ராஜேந்திரா சாலையில் உள்ள மையத்தடுப்பை கேந்திரிய வித்யாலயா பள்ளி வரை நீட்டிப்பு செய்வது. பழனி சாலையில் புதியதாக கட்டப்பட்டுவரும் பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள பொக்லைன், கிரேன் ஆகியவற்றை தாராபுரம் சாலையிலும், வாடகை கார்களைபழனி சாலையில் நாராயணன் காலனி அருகிலும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்வது.விளம்பர பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது.மேலும் அவற்றைஅனுமதி இல்லாமல் வைக்கும் நிறுவனங்கள் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.