அனைத்து பரிசோதனைகளும் இலவசம்:கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர் சங்கீதா தகவல்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்கள்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மாநிலம் முழுவதும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 2 மருத்துவ முகாம்களும், ஊரக பகுதிகளில் 4 முகாம்களும் என 6 இடங்களில் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள் 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த சிறப்பு முகாம்கள் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கே.கே.நகர் அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஊரக பகுதிகளில் சக்கிமங்கலம் மீனாட்சி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் வெள்ளயம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி அய்யப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெறுகிறது.
காப்பீட்டு திட்டம்
இந்த முகாம்களில் தாய்சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனையான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்படும். இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் இலவசமாக அளிக்கப்படும்.
அனைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதிகள் ஒரே இடத்தில் மக்களுக்கு அளிக்கும் வகையில் அனைத்து முகாம்களும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரபல தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் நடத்தப்படும். மேலும், தொடர் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.