விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும்


விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும்
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 6:45 PM GMT)

மனுவாக கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும் என்றும் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் உறுதி அளித்தார்

கடலூர்

கடலூர்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள வேளாண் சார்ந்த குறைகள் பற்றி பேசினர்.

இதன் விவரம் வருமாறு:-

மலட்டாறு ஏரியை தூர்வார...

குமரகுரு (விவசாயி) :- குறிஞ்சிப்பாடி அருகே டி.பாளையத்தில் உலர் களம் அமைத்து தர வேண்டும். அங்குள்ள ஏரியில் கூடுதலாக தடுப்பணை அமைக்க வேண்டும். கருப்பஞ்சாவடியில் உலர் களம் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும்.

காந்தி (விவசாயி) :- மலட்டாறு ஏரியை தூர்வார வேண்டும். தூர்வாரினால் இப்பகுதியை சேர்ந்த 62 கிராம விவசாயிகள் பயன்அடைவார்கள்.

நிவாரணம் வழங்க வேண்டும்

ரவீந்திரன் (விவசாயி) :- கடலூர் மாவட்ட காவிரி பாசன பகுதியில் சாகுபடி பணிகள் தொடங்க ஆகஸ்டு மாத இறுதியில் பாசன நீர் வினியோகம் செய்ய வேண்டும். காவிரி பாசன வாய்க்கால்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க வேண்டும். நிலத்தடி நீர் உப்பாக மாறி வருவதால் இறால் பண்ணைகளை மூட வேண்டும். வெள்ளாற்றில் தரைமட்ட தடுப்பணை அமைக்க வேண்டும். கோவில் நிலங்கள் குத்தகை வசூல் ஏக்கருக்கு ரூ.1000 இருந்ததை, ரூ.6 ஆயிரமாக இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தி உள்ளது. இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, குத்தகையை குறைக்க வேண்டும்.

குஞ்சிதபாதம் (விவசாயி):- சமீபத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மரங்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும். பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்து இல்லை. தேவையான மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருட்டு

விநாயகமூர்த்தி (விவசாயி):- காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்கள், டிராக்டர்களில் உள்ள பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று வருகின்றனர். இந்த குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ் (விவசாயி) :- நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் வீணாகும் தண்ணீரை தொழுதூர் அணைக்கட்டு வழியாக திருப்பி வெலிங்டன் ஏரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை

மணிகண்டன் (விவசாயி) : மங்களூர் பகுதி மக்களுக்கு புல் அறுக்கும் எந்திரங்களை கூடுதலாக வழங்க வேண்டும்.

மாதவன் (விவசாய சங்க நிர்வாகி) :- அரசு அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை விரைந்து வழங்க வேண்டும். சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரங்கிப்பேட்டை கீழதிருக்கழிப்பாளை பகுதியில் உப்புநீர் புகுந்து வருகிறது. இதனால் 50 ஹெக்டேர் விளைநிலங்கள் உப்பாக மாறி விட்டது. ஆகவே வெள்ளாற்றின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைளை விவசாயிகள் பேசினர்.

தீர்த்து வைக்கப்படும்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் அருண்தம்புராஜ் பேசுகையில், ஒவ்வொரு விவசாயிகளும், தங்களின் கோரிக்கைகளை கூறி உள்ளீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கோரிக்கைகள் உள்ளது. ஆகவே உங்கள் கோரிக்கையை கடிதமாக கொடுத்தால், அதை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். வருங்காலங்களில் மனுவாக கொடுங்கள். அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை குறிப்பெடுத்து வைத்துள்ளீர்கள். அதில் தங்களின் அதிகார வரம்புக்குள் வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் உண்மையான, நேர்மையான கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும் என்றார்.


Next Story