"சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்":அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

“சேலம் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி

"சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்" என்று தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க இளைஞர் அணி சார்பில் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழைத்தால் முன்னேறலாம்

தூத்துக்குடிக்கு தி.மு.க. வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தி.மு.க. இயக்கத்தை ரத்தம் சிந்தி வளர்த்த மாவட்டம். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது மாவட்ட செயலாளராக இருந்த கே.வி.கே.சாமியை 1956-ம் ஆண்டு இந்த தூத்துக்குடியில் வைத்து கொலை செய்தார்கள். உரிமைக்காக மண்ணை காக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 13 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.

தலைமையும், தலைவரும் சொல்லும் பணியை யார் சாதித்து காட்டுகிறார்களோ அவர்கள்தான் உண்மையான செயல்வீரர்கள். தி.மு.க.வை பொறுத்த வரை உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞர் அணியே சாட்சி.

சேலம் மாநாடு

1980-ம் ஆண்டு தி.மு.க.வில் இளைஞர் அணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இளைஞர் அணியின் 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மாநாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக சேலம் மாநாடு அமைய வேண்டும்.

சமீபத்தில் மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அந்த மாநாடு உதாரணமாக அமைந்தது. அந்த மாநாட்டில் தயிர் சாதம் நன்றாக இருக்கிறதா, புளி சாதம் நல்லா இருக்கா என பட்டிமன்றம் நடந்தது.

சனாதன கோட்பாடு

சனாதன கோட்பாடுகளை ஒழிக்க அன்று அம்பேத்கர், பெரியார், கலைஞர் போராடினார்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறார். சனாதன கோட்பாடுகளை ஒழிக்கும் வரை தி.மு.க. போராடிக் கொண்டேதான் இருக்கும். இதனால் தி.மு.க. இந்து விரோத கட்சி என திரித்து பேசுகிறார்கள். தி.மு.க. அரசு பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து உள்ளது. இந்த திட்டத்தால் பயன்பெற்றதில் 99 சதவீதம் பேர் இந்துக்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், மதியழகன், தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், சுதாகர், பால்துரை, ஸ்டாலின், குமார்பாண்டியன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் ஏ.கே.கமால்தீன், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ஏ.பி.ரமேஷ், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், திருச்செந்தூர் வார்டு கவுன்சிலர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா.ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், நாலாட்டின்புதூர் கிளை செயலாளர் புவனேஷ்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ச.ஜனகர், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீதபாண்டியன், உடன்குடி பேரூர் கழக செயலாளர் மால்ராஜேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகமது, மாநில வணிகர் நலவாரிய உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன் (வடக்கு), அனிதா ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கினர்.


Related Tags :
Next Story