அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க ஒன்றிய தலைவர் அகிலாண்டேஸ்வரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாலகுமார், மாதர் சங்க ஒன்றிய தலைவர் மரகதம் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைக்கு ரூ. 600 சம்பளம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் வீடு இல்லாதவர்களுக்கு நில பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு உத்தரவு படி மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை பணியிடத்தில் 4 மணி நேரம் மட்டும் இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் கோரிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் மனோகரனிடம் மனு அளித்தனர். இதில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.