அமித் மால்வியா வைத்த குற்றச்சாட்டு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும்.
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு பதலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை என்றும் பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.