சாலை அமைப்பதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
காவனூரில் சாலை அமைப்பதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த காவனூர் கிராமத்தில் திமிரி - வேலூர் நெடுஞ்சாலையில் சுமார் 750 மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் சாலையின் இரு புறமும் அளவீடு செய்து, சுவர்களில் குறியீடு செய்யபட்டது. சாலையின் தெற்கு புறம் கடையின் சுற்றுச்சுவர், வீடுகளில் மாடிப்படிகள், கடைகளின் முகப்புகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் கால்வாய் அகலமாக அமைத்தனர்.
பிறகு சாலையின் வடக்கு பக்கம் சுமார் 5 அடி அகலம் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை போட பணி தொடங்கியதும், ஒரு சிலர் கருப்பு கொடி கட்டி நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஊர்வலமாக வந்தனர். இதன் காரணமாக வடக்கு பகுதியில் சுமார் 1½ அடி அகலம் கால்வாய் அளவுக்கு மட்டும் கால்வாய் அமைக்கவும், ஆக்கிரமிப்பினை அகற்றாமல் சாலை அமைக்கவும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலைத் துறையினரின் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி திமிரி- வேலூர் நெடுஞ்சாலையை போக்குவரத்துக்கு ஏதுவாக விரிவுபடுத்தி, சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.