ஓட்டுனரை, இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஊட்டியில் ஆட்டோ டிரைவரை, இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் ஆட்டோ டிரைவரை, இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இந்த ஆட்டோக்கள் ஊட்டி நகரில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பூங்கா நுழைவுவாயில்கள், தங்கும் விடுதிகள் நுழைவுவாயில் என பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் ஊட்டி படகு இல்லம் சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி அருகில் 10 ஆண்டுக்கும் மேலாக ஆட்டோ நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. அங்கு 3 ஆட்டோக்கள் தினமும் நிறுத்தி அங்கிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை தேவைக்கு ஏற்றார் போல அழைத்துச் சென்று வருகிறது.
இந்த நிலையில் தங்கும் விடுதி அருகே ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், தங்களுக்கு அதிக இடையூறு ஏற்படுவதாகவும் தனியார் தங்கும் விடுதி மேலாளர் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
முற்றுகை
இதுகுறித்து விசாரணை நடத்த வந்த இன்ஸ்பெக்டர் பிரியா ஆட்டோக்களை அங்கு நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து அங்கு வாகனத்தை நிறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல இரு ஆட்டோக்கள் படகு சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பிரியாவுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் பிரியா ஆட்டோ டிரைவரை வினோத்தை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார், இந்த நிலையில் ஆட்டோ டிரைவரை தாக்கி விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி நேற்று இரவு ஆட்டோ டிரைவர்கள் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா இதுகுறித்து (நாளை) இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தால் ஆட்டோ டிரைவர்கள் கிளம்பி சென்றனர்.
இதற்கு இடையே நேற்று காலை மீண்டும் ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.