பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய மந்திரியிடம் பா.ஜனதா நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய மந்திரியிடம் பா.ஜனதா நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.
பூம்புகார் மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான அகோரம், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வரதராஜன் ஆகியோர் மத்திய பால் வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த துறைமுகத்தை மேம்படுத்த மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மேலும் கடந்த ஆண்டு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த படகுகள் இலங்கை வசம் உள்ளது. இந்த படகுகளை இழந்ததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
படகுகளை மீட்க வேண்டும்
இதனை கருத்தில் கொண்டு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு, படகுகளின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் செய்ய உரிய பயிற்சிகளை வழங்க ஏதுவாக தரங்கம்பாடியில் மத்திய மீன்வளத்துறை மூலம் பயிற்சி நிறுவனத்தை தொடங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.