ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு


ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் சூரியகுமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பிரியதர்ஷினி ஞானவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் தலைவர் என்.கே.ஆர். சூர்யகுமார் பேசுகையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்களது ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ள மாநில 15-வது நிதி குழு மூலம் உறுப்பினர்களுக்கு தலா ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் அங்கன்வாடி, பள்ளி கட்டிடம், சமையலறை கூடம், கழிவு நீர் கால்வாய்கள், சிமெண்டு சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைத்துக் கொள்ளலாம்.

ரூ.2 கோடி ஒதுக்கீடு

இதற்காக மாவட்ட ஊராட்சிக்கு மொத்தம் ரூ.2 கோடியே 15 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு என்ன தேவை என்று அறிந்து பணிகள் விவரங்களை எழுதிக் கொடுத்தால் உடனடியாக பணிகள் செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

பின்னர் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேல் (தி.மு.க.):-

ஆலங்காயம் பகுதிக்கு உட்பட்ட ஜாப்ராபாத், பள்ளிப்பட்டு, மதனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தார்சாலைகள் அமைத்துத்தர வேண்டும். அந்தப் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பகுதிகளில் சிமெண்டு சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கித்தர வேண்டும்.

தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார்:- தற்போது வரப்பட்ட நிதி அனைவருக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் கூடுதல் நிதி வழங்கப்படும். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

குடிநீர் பிரச்சினை

சுபாஷ் சந்திரபோஸ் (வி.சி.க.):-

பெருமாபட்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்.

தலைவர்:- ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து கிராம பகுதியிலும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரப்பட உள்ளது.

சிந்துஜா ஜெகன் (தி.மு.க.):- தற்போது மாவட்ட ஊராட்சி குழுவில் 15-வது மாநில நிதிக்குழு பணம் எவ்வளவு உள்ளது?.

தலைவர்:- ரூ.7 கோடி உள்ளது. தற்போது மாவட்ட ஊராட்சிக் குழு மூலம் செய்து வரும் பணிகளுக்கு படிப்படியாக பணம் வழங்குவதற்காக இந்த பணம் உள்ளது.

கே.என்.குணசேகரன் (தி.மு.க.):- மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்குளம் முனிவேல் (தி.மு.க.):- மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

சசிகலா சாந்தகுமார், கவிதா தண்டபாணி உள்பட பலர் பேசினார்கள். வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் குறித்து விளக்கினார்.


Next Story