பாளையங்கால்வாயை தூர்வார ரூ.10 லட்சம் ஒதுக்கீடு-சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தகவல்


பாளையங்கால்வாயை தூர்வார ரூ.10 லட்சம் ஒதுக்கீடு-சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தகவல்
x

பாளையங்கால்வாயை தூர்வார ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

பாளையங்கால்வாயை தூர்வார ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

உறுதிமொழி குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோர் நேற்று நெல்லைக்கு வந்தனர். இந்த குழுவினர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-

பாளையங்கால்வாய்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டோம். நெல்லை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள பாளையங்கால்வாயை பார்வையிட்டோம். இது அமலைச்செடிகள் மற்றும் கழிவுநீரால் தூர்ந்து போய் கிடக்கிறது. இதை தூர்வாருவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தூர்வாரிய பிறகு மாநகராட்சி பகுதியை தாண்டி உள்ள 6,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான வளாகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம், அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டோம். அங்கு ஏழை, எளிய மக்களுக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு பயிற்சி

சீவலப்பேரி ரோட்டில் உள்ள விளையாட்டு கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் உள்ளது. மேலும் அந்த வளாகத்தில் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள தேவையான விளையாட்டு அரங்கம் அமைக்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதங்கள் வைப்பறையை சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டனர். அப்போது அந்த அறையில் ஜன்னல் வைத்து கட்டியிருந்ததால், பாதுகாப்புக்கு உகந்ததா? என்று விளக்கம் அளிக்குமாறு காவலர் வீட்டுவசதிவாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

ஆய்வின்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அவர் பேசும் போது, சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி நடவடிக்கைகள் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு உறுதிமொழி பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைகளில் சில பணிகள் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும் தாமதமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது ஷபீர்ஆலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த குழுவினர் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story