குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்ட பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்ட பணிக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் கூறினார்.
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்ட பணிக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோ.வி.செழியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மக்கள் நலன் கருதி பொது கோரிக்கைகளுக்கு மனு அளித்த நபர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். பின்னர் வரபெற்ற மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் அதிகாரியிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்பட்டது.
கூட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் செங்கம் மு.பெ.கிரி, விருகம்பாக்கம் பிரபாகர ராஜா, பர்கூர் மதியழகன், வாணியம்பாடி செந்தில்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்காடு ஈஸ்வரப்பன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம், திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), தேவி பென்ஸ் பாண்டியன் (ஆற்காடு), முகமது அமீன் (மேல்விஷாரம்), நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் நன்றி கூறினார்.
பின்னர் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
90 சதவீத கோரிக்கைகள்
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சட்டப்பேரவை மனுக்கள் குழு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் மனுதாரர்கள் அனுப்பிய மனுக்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நாங்கள் நிறைவேற்றக்கூடிய அனைத்து கோரிக்கைகளுக்கும், முன்னதாகவே பல ஆய்வு கூட்டங்களை கலெக்டர் நடத்தி இருக்கிறார். அதன் விளைவாக மனுதாரர்களின் 90 சதவீத கோரிக்கைகள் சுமூகமாக நிறைவேற்ற முடிந்தது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 86 மனுக்கள் வரப்பட்டு 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 50 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம், முதியோர் உதவித்தொகை, மனுக்கள் குழுவிற்கு வந்த கோரிக்கைகளும் விரைந்து செயல்பட்டு பெரும் முயற்சி எடுத்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
ரூ.12 கோடி ஒதுக்கீடு
நீண்ட காலமாக அகற்றப்படாமல்உள்ள குரோமிய கழிவுகளை எங்கள் குழுவினர் அதற்குரிய சுற்றுச்சூழல் அதிகாரிகளை வரவழைத்து பார்வையிட்டோம். கழிவுகளை அகற்ற முதற்கட்ட பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கழிவுகளின் தன்மை என்ன?, அகற்றும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாலாறு அணைக்கட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதி பெறும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சக்கரமல்லூர் ஊராட்சி
முன்னதாக ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சக்கரமல்லூர் ஊராட்சியில் புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு பகுதியை சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் பார்வையிட்டனர். ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலப்புலம் ஊராட்சி
இதேபோல மேலப்புலம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழுதடைந்துள்ள துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட 2022-2023 நிதி ஆண்டில் மாவட்ட ஊராட்சி நிதிக்குழு மான்ய திட்ட நிதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதேபோன்று துணை சுகாதார நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்த ரேஷன் கடையில் அரிசி வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் ரவி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.