வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு


வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
x

அணைக்கட்டு பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடியே 21 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர்

ஒன்றியக்குழு கூட்டம்

அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டம் நேற்று மாலை ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, துணைத்தலைவர் சித்ரா குமார பாண்டியன், அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு. பாபு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

சுதாகரன்:- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்றியத்தில் வழங்கப்படும் வேலைகளை தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

பணி செய்ய விடாமல் தடுப்பு

லட்சுமி:- எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் என்னையும் எங்கள் குடும்பத்தையும் சரமாரியாக தாக்கினார். நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். இது குறித்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, பொதுமக்கள் தரும் புகார்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசுக்கு களங்கம் ஏற்படும் விதமாக செயல்படுவதாகவும், இது குறித்து சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக புகார் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனை அடுத்து அனைத்து கவுன்சிலர்களும் பழனிமுத்துவை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

ரூ.2 கோடி ஒதுக்கீடு

வருகிற 1-ந் தேதி முதல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. ஆகவே சமையலறை, வகுப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கவுன்சிலர்களும் திட்டப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.8½ லட்சம் வீதம் ரூ.2 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story