குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு


குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 3 July 2023 1:23 AM IST (Updated: 3 July 2023 4:12 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 150 விவசாயிகள் பதிவுசெய்துள்ளனர். 2½ ஏக்கர் வரை இடுபொருட்கள் வழங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 150 விவசாயிகள் பதிவுசெய்துள்ளனர். 2½ ஏக்கர் வரை இடுபொருட்கள் வழங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரும் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொகுப்பு திட்டம்

மேலும் குறுவை சாகுபடியை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்துவதால் விவசாயிகளுக்கு உரம், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவை மானிய விலையில் வழங்கி, விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்துவதால், உற்பத்திச் செலவு ஓரளவுக்கு குறைகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.61.12 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

அதன்படி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் யூரியா, டி.ஏ.பி. தலா ஒரு மூட்டையும், பொட்டாஷ் அரை மூட்டையும் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.75.95 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் மானிய விலையில் இடுபொருட்களை பெற வேளாண்மைத்துறையின் "உழவன் செயலி" மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தில் உள்ள விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டது. இது போதுமானது அல்ல. இதனை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழக அரசு ஒரு குடும்பத்தில் ஒரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2½ ஏக்கருக்கு மானியத்தில் உரம் மற்றும் இடுபொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு விவசாயிக்கு தலா 2½ மூட்டை யூரியா, டி.ஏ.பி., 75 கிலோ பொட்டாஷ் ஆகியவையும், பசுந்தாள் உரங்கள், 50 சதவீத மானியத்தில் விதை நெல், மாற்றுப்பயிர் திட்டத்தில் உளுந்து, கடலை, சிறுதானியப் பயிர்களுக்கான விதைகளும், பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் கருவிகளும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜவிடம் கேட்ட போது, தஞ்சை மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் இந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக ரூ.21 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2½ ஏக்கருக்கு மானியத்தில் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்போது உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 150 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 92,500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் வேளாண் பொறியியல் துறை மூலம் 236 பவர் டில்லர்களும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றார்.


Next Story