ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.32¼ கோடி ஒதுக்கீடு; சி.என்.அண்ணாதுரை எம்.பி. தகவல்
திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.32¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சி.என்.அண்ணாதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.
ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. நாடாளுமன்றத்திலும், மத்திய ரெயில்வே மந்திரியிடமும் வலியுறுத்தி உள்ளார். அதைத்தொடர்ந்து 'அம்ரீத் பாரத்' திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.32¼ கோடி ஒதுக்கீடு செய்து ரெயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் அதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறியதாவது:-
'அம்ரீத் பாரத்' திட்டத்தில் திருவண்ணாமலையை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதான் அடிப்படையில் கடந்த நிதி ஆண்டில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆன்மிக நகரம் என்ற அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் திருவண்ணாமலை ரெயில் நிலைய மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.6¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கை அடிப்படையில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரெயில் நிலையங்களையும் 'அம்ரீத் பாரத்' திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ரூ.14 கோடியும், திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு ரூ.12 கோடியும் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் தரம் உயர்த்துதல், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, பயணிகளுக்கான உள் கட்டமைப்புகள் வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்படும்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைத்திட பணியாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி, பொதுப்பணித்துறை அமைச்சரின் ஆலோசனை பெற்று தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் தற்போது 3 ரெயில் நிலையங்களை மேம்படுத்த நிதி பெறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.