அடிப்படை வசதிகள் செய்ய ரூ.37¼ லட்சம் ஒதுக்கீடு
ஒடுகத்தூர் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.37¼ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தெரிவித்தார்.
பேரூராட்சி கூட்டம்
ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரேணுகாதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக ஊழியர் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
லதா:- அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு மற்றும் குடிநீர் மோட்டார் சுவிட்ச் பெட்டிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குச்சிகள் மூலம் சுவிச்சை ஆன் செய்து வருகிறோம். உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
குடிநீர் வசதி
இதனை அடுத்து 7, 8, 9 ஆகிய வார்டுகளில் உள்ள காலி இடங்களில் பூங்கா அமைத்து தரவேண்டும். அனைத்து வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகம் உள்ள பகுதியில் தேவைப்படும் அளவிற்கு குடிநீர்குழாய்களை அமைத்துத் தர வேண்டும் என 11-வது வார்டு கவுன்சிலர் பானு கோரிக்கை வைத்தார்.
8-வது வார்டு கவுன்சிலர் சிலம்பரசன், ராஜாபாளையத்தில் சுடுகாட்டுப் பகுதியில் பழுதடைந்துள்ள சின்டெக்ஸ் மற்றும் பைப்லைன் ஆகியவற்றை பழுது பார்த்து தருமாறு வலியுறுத்தினார்.
கல்லுடை பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்துதர வேண்டும். மேலும் அந்தப்பகுதி பொதுமக்களுக்கும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 1-வது வார்டு வெங்கனம்பாளையத்தில் பைப்லைன், சுடுகாடு பகுதியில் எரிமேடை, தெருக்களின் பெயர் பலகை அமைத்து தருமாறு மோகன் என்பவர் வலியுறுத்தினார்.
ரூ.37¼ லட்சம் ஒதுக்கீடு
இறுதியாக பேரூராட்சி தலைவர் பேசும்போது வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றி தரப்படும் என்றும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ 37 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.