காவிரி டெல்டா பாசன வட்டாரங்களில்குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


காவிரி டெல்டா பாசன வட்டாரங்களில்குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கீடு  கலெக்டர் தகவல்
x

காவிரி டெல்டா பாசன வட்டாரங்களில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்

மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியினை செம்மையாக செய்திடும் வகையில் 2022-ம் ஆண்டிற்கான குறுவை தொகுப்புத்திட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி வட்டாரத்திற்கு இத்தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், நெல் விதைகள் மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்குவதற்காக ரூ.5.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்கள் தலா ஒரு மூட்டை 100 சதவீத மானியத்தில் 22 ஆயிரத்து 100 ஏக்கருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இலக்கு நிர்ணயம்

மேலும் விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வெளியிட்ட 10 ஆண்டுகளுக்குள் உள்ள ரகங்களுக்கும், 10 வருடங்களுக்கு மேலான ரகங்களுக்கும் 50 சதவீத மானியமும் என 80 மெட்ரிக் டன் விதைக்கு மொத்தமாக 14 ஆயிரம் ஏக்கருக்கு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவையில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க உளுந்து பயிரிடும் பொது விவசாயிகளுக்கு விதைகள் மண்ணில் இடும் நுண்ணுயிரிகள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்கள் விதைப்பு மற்றும் அறுவடை பணிக்கான ஊக்கத்தொகையாக 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1250 வரையும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ1570 வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க இயலாது

இதில் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்புத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் ஒரு பயிர் இனத்தில் பயனடைந்தோர் மற்றொரு இனத்தில் விண்ணப்பிக்க இயலாது. எனவே விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Next Story