பொன்னையாற்று தரைப்பாலத்தை சீரமைக்க ரூ.6 லட்சம் ஒதுக்கீடு
மேல்பாடி பகுதியில் சேதமடைந்த பொன்னையாற்று தரைப்பாலத்தை சீரமைக்க ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த மேல்பாடி பகுதியில் கடந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதன் பிறகு தற்காலிகமாக மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட மாண்ட்ஸ் புயல் காரணமாக தொடர்ந்து 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில் மேல்பாடி தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பாலத்தின் மீது, வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் சேதமடைந்த மேல்பாடி தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மேல்பாடி தரைப்பாலத்தை சீரமைக்க அவசரகால நிதியாக ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.