இலவச வேட்டி- சேலை உற்பத்தியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு


இலவச வேட்டி- சேலை உற்பத்தியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்  உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு
x

இலவச வேட்டி- சேலை உற்பத்தி

ஈரோடு

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள், ஈரோடு பவானி ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து உதவி இயக்குனர் சரவணனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

இந்த ஆண்டிற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே பல ஆண்டுகளாக எவ்வாறு உற்பத்தி ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வேட்டி, சேலை உற்பத்தியில் எந்தவித மாறுதல் இல்லாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும், தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளர் குடும்பங்களில் வாழ்வாதாரம் மேம்படும்.

இதேபோல் கடந்த ஆண்டு வேட்டி தயாரிப்பு ஆகஸ்டு மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பர் மாதத்திலும் தொடங்கப்பட்டதன் காரணமாக உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த ஆண்டு உற்பத்தியை விரைவில் தொடங்க அனுமதி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story