2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
கொள்ளை வழக்கில் கைதான 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள பி.பி. சி.காலனியை சேர்ந்த வக்கீல் செல்லத்துரை (வயது 60) வீட்டில் கடந்த வாரம் 70 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதே போல் கடந்த ஜனவரி மாதம் பெருமாள்புரம் கனரா வங்கி காலனியை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரியான தேவி என்பவர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது.
இது தொடர்பாக பெருமாள்புரம் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை டவுன் செண்பகம்பிள்ளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார் மற்றும் பேட்டை திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 49 பவுன் நகை ரூ.27 லட்சம் மீட்கப்பட்டது. இவர்களுக்கு பல்வேறு இடங்களில் நகை திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று நெல்லை கோர்ட்டில் 6 நாட்களுக்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் 2 பேரையும் சிறையில் இருந்து விசாரணைக்காக போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர்.