அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம்


அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து வண்டல் மண் பெற்றுக்கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்காக தங்கள் கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும், ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அரசால் விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்க தகுதி வாய்ந்த நீர்நிலைகளின் விவரம், புல எண் மற்றும் அகற்ற முடிவு செய்துள்ள கனிமத்தின் அளவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் விவரங்கள் பெறப்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடுகள்), புஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்), வீட்டு பயன்பாட்டுக்கு 30 கனமீட்டர் (10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர் லோடுகள்) அளவிற்கு வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாய நிலங்களுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கிராம கணக்குகளுடன் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மற்றும் அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story