முத்தையாபுரத்தில் பெற்றோருடன் சேர்ந்து கனநீர் ஆலையை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
முத்தையாபுரத்தில் பெற்றோருடன் சேர்ந்து கனநீர் ஆலையை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பிக்நகர்:
முத்தையாபுரத்தில் குடியிருப்பில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்துக்கு இயக்கி வந்த பஸ்சை நிறுத்தியதால் ஆவேசமடைந்த மாணவ, மாணவியர் நேற்று பெற்றோருடன் இணைந்து கனநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.எஸ்.இ. பள்ளி
தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கனநீர் ஆலை மற்றும் பழையகாயல் பகுதியில் செயல்படும் அணுசக்திதுறை (சிர்கோனியம்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஒடிசா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி வசதிக்காக ஸ்பிக்நகர் மற்றும் பழையகாயல் பகுதியில் குடியிருப்பும் பழையகாயலில் சி.பி.எஸ்.இ.பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
முற்றுகை போராட்டம்
இந்த பள்ளியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் குடியிருப்பில் இருந்து பள்ளிக்கு சென்றுவர பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முதல் குடியிருப்பில் இருந்து பள்ளிக்கு இயக்கப்பட்ட பஸ் வசதி நிறுத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் ஆலைநுழைவு வாயிலில் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார், தொழிற்சாலை பொதுமேலாளர் வெங்கடேசவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பெற்றோர், மாணவ, மாணவியரை போலீசார் சமாதானம் செய்து முற்றுகையை கைவிட செய்தனர். ஆனால், மீண்டும் வழக்கம் போல் பஸ் வசதி செய்து தரும் வரை வகுப்புகளை புறக்கணிக்க போவதாக பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் தெரிவித்தனர்.
காரணம் என்ன?
இப்பிரச்சினை குறித்து பெற்றோர் கூறுகையில், பள்ளி தொடங்கிய போது, எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்தினர். இதனால் ஸ்பிக்நகர் சுற்றுவட்டார பகுதியில் பயின்ற எங்களது குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்த்தோம். இப்போது பஸ்வசதியை திடீரென நிறுத்துவதை ஏற்க முடியாது. கல்வியாண்டு தொடக்கத்தில் இந்த அறிவிப்பை சொல்லியிருந்தால், எங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்திருப்போம்.
-தற்போது கல்வியாண்டு இடையில் திடீரென பஸ்வசதி மறுப்பதை ஏற்கமுடியாது. எனவே தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.