மாணவ-மாணவிகள் படிப்பை தொடர மாற்று ஏற்பாடு


மாணவ-மாணவிகள் படிப்பை தொடர மாற்று ஏற்பாடு
x

அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி மூடப்பட்டதால் அதில் படித்த மாணவ-மாணவிகள் படிப்பை தொடர மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

விருதுநகர்

விருதுநகர்,

அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி மூடப்பட்டதால் அதில் படித்த மாணவ-மாணவிகள் படிப்பை தொடர மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

கல்லூரி மூடல்

அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி டாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு தங்களுக்கு படிப்பைத் தொடர மாற்று ஏற்பாடு செய்ய கோரி போராட்டம் நடத்தினர். இக்கல்லூரியில் கேட்டரிங், நர்சிங், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இக்கல்லூரியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மேகநாத ரெட்டியை சந்தித்தனர். அவர்கள் தாங்கள் தங்கள் படிப்பை தொடர வேறு கல்லூரிகளில் ஏற்பாடு செய்யுமாறு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். கலெக்டரும் அவர்களிடம் அந்த கல்லூரியில் நடந்த படிப்பு விவரங்கள் பற்றி கேட்டறிந்தார்.

வங்கி கணக்குகள் முடக்கம்

இதில் மாநிலத்திற்குள் உள்ள அமைப்புகளிடம் அனுமதி பெறவேண்டிய படிப்புகளுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும், டெல்லியில் தொடர்பு கொண்டு ஒரு சில படிப்புகளுக்கு விளக்கம் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளை கல்லூரிக்கு அனுப்பி வைப்பதாகவும், மாணவ-மாணவிகள் தங்கள் எந்தெந்த கல்லூரிகளில் படிப்பை தொடர முடியும் என்ற பட்டியலை அவர்களிடம் கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி நிர்வாகியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார். தற்போதைய நிலையில் கல்லூரி விடுதியில் தங்க விரும்பும் மாணவ-மாணவிகள் தங்கலாம் என்றும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.


Next Story