தூத்துக்குடியில்போதைப்பொருள் என்று கூறி படிகாரத்தை விற்க முயன்ற 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில்போதைப்பொருள் என்று கூறி படிகாரத்தை விற்க முயன்ற 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில் போதைப்பொருள் என்று கூறி படிகாரத்தை விற்க முயன்ற 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோன்று கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரையோரங்களிலும் ஏதேனும் பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதைப்பொருளை சிலர் விற்பனை செய்வதற்காக வைத்து இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்தனர்.
போதைப்பொருள்
அப்போது, பழைய மாநகராட்சி அருகே உள்ள பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் 3 கிலோ எடை கொண்ட 3 பொட்டலங்கள் வைத்து இருந்தனர். அதனை பிளாஸ்டிக் தாளால் நன்கு சுற்றி பார்சல் செய்து இருந்தனர். போலீசார் அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் கற்கண்டு போன்ற பொருள் இருந்தது.
பொதுவாக கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் போதைப்பொருள் கற்கண்டு போன்று இருக்கும் என்பதால், போதைப்பொருளாக இருக்கும் என்று போலீசார் கருதினர். ஆனால், பரிசோதனையில் அது போதைப்பொருள் இல்லை என்பது தெரியவந்தது. மாறாக படிகாரத்தை சிறிய கற்கண்டு அளவில் வெட்டி, கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்று கூறி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
வாக்கி-டாக்கி
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி வி.இ.ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் (வயது 65), சண்முகபுரத்தை சேர்ந்த அகஸ்டின்தேன்ராஜ் (54) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஒரு ஜீப்பில் 2 'வாக்கி-டாக்கி'கள் பொருத்தி இருந்தார்களாம். அதனை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது தனியாக கடையில் வாங்கிய 'வாக்கி-டாக்கி'யில், போலீசாரின் தனி அலைவரிசையை செட்டிங் செய்து, தகவல்களை கேட்டு இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் போலீசாரின் நகர்வுகளை அறிந்து அதற்கேற்ப கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
வழக்குகள்
பிடிபட்ட செல்வக்குமார் மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவில், ஏற்கனவே 12 கிலோ தங்க கட்டிகள் கடத்திய வழக்கு இருந்தது. அந்த வழக்கில் அவர் விடுதலை அடைந்தார். மேலும் செம்மரக்கட்டை கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோன்று அகஸ்டின் தேன்ராஜ் மீது 5 கிலோ ஹெராயின் கடத்திய வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 'வாக்கி-டாக்கி' மற்றும் போலி போதைப்பொருள் ஆகியவற்றையும் கியூ பிரிவு போலீசார் தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.