முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1987-94-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பணியாற்றும் துறைகள் குறித்து மற்றவர்களிடம் கூறினர். நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் எம்.சுப்பிரமணி பேசுகையில், இந்நிகழ்ச்சி மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள நமது நண்பர்களை, அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல உதவியாக அமைய வேண்டும் என்றார். முன்னாள் மாணவர் ஜெ.ஸ்ரீதர் பேசுகையில், அனைவரும் 50 வயதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எந்திர வாழ்க்கையில் உடல் நலத்தை கவனிப்பதில் மிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்கள் தாண்டிக்குடி அருகே உள்ள பெரியூர் என்னும் ஊரில் தனியார் காபி எஸ்டேட்டுக்கு சென்று சங்கமம் 3.0 என்ற நிகழ்ச்சியை நடத்தினர். மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பி.மணிகண்டன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணி, சிவனேசன், ராம்குமார், நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.