ஆழ்வார்திருநகரி பகுதியில் கோவில் திருவிழாக்களில் சாதி அடையாளங்களை பயன்படுத்த தடை
ஆழ்வார்திருநகரி பகுதியில் கோவில் திருவிழாக்களில் சாதி அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பகுதியில் கோவில் திருவிழாக்களில் சாதி அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாற்றத்தைதேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிராமங்கள் தோறும் நடத்தி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், கோவில் திருவிழாக்கள் மற்றும் கிராமங்களின் பொதுஇடங்களில் சாதிய அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன்படி பெரும்பாலான கிராமங்களில் பொதுஇடங்களில் இருந்த சாதிய பெயர்கள் மற்றும் அடையாளங்களை பொதுமக்களே போலீசாரின் முன்னிலையில் அழித்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மாவடிப்பண்ணை, மேலகடம்பா, கோட்டூர் ஆகிய கிராமங்களில் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் மற்றும் குரும்பூர், ஆழ்வார்திருநகரி போலீசார், மாவடிப்பணணை, மேலகடம்பா, கோட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருவிழா நாட்களில் சாதிய கொடிகள், அடையாளங்களை பயன்படுத்த கூடாது, தீர்த்தம் எடுத்து வரும் நேரங்களில் மேள தாளங்கள் முழங்கி ஆடி பாடி வரவும், 20 பேருக்கு மேல் வரவும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
எச்சரிக்கை
இக்கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், கோவில் திருவிழா தொடர்பான வழக்கங்களை மாற்ற வேண்டாம். சட்ட விரோத பழக்கங்களை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் சாதிய அடையாளங்களையோ, சின்னங்களையோ பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது. திருவிழா மட்டுமின்றி தொடர்ந்து சாதிய அடையாளங்களை கிராம மக்கள் தவிர்க்க வேண்டும். இதை மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், என கேட்டு கொண்டார்.