ஆழ்வார்திருநகரிஆதிநாதர் ஆழ்வார்கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
வைகாசி திருவிழா
ஆழ்வார்திருநகரியில் நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்குகிறது ஆதிநாதர் ஆழ்வார் கோவில். இங்குதான் சுவாமி நம்மாழ்வார் அவதரித்துள்ளார். சுவாமி நம்மாழ்வார் அவதார தினமான வைகாசி விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாள் நவதிருப்பதி சுவாமிகளுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனமும், நள்ளிரவில் கருட சேவையும் நடந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடந்தது. பின்னர் சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மேலரதவீதி, கீழரதவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் செயல் அலுவலர் அஜித் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.