அமரர் குளிர்சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி
பரசலூரில் அமரர் குளிர்சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றமானது அதன் நிறுவன தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், தொழிலதிபருமான டாக்டர் மாயா வெங்கடேசன் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் சார்பில் சுனாமி, மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவிகள், பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, மாணவ -மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக அந்த மன்றத்தின் சார்பில் இலவச அமரர் குளிர்சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி செம்பனார்கோவில் அருகே பரசலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றத்தின் நிறுவன தலைவர் மாயா வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பரசலூர், செம்பனார்கோவில், சாத்தனூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர், கூடலூர், கீழையூர், பனங்குடி, ஈச்சங்குடி, கடலி, திருவிளையாட்டம், ஆறுபாதி, மேலப்பாதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் குடும்பங்களில் ஏற்படுகிற இறப்புகளின் போது கட்டணமின்றி பயன்படுத்தும் வகையில் தானியங்கி ஒலிபெருக்கியுடன் கூடிய ரூ7.லட்சம் மதிப்பிலான இலவச நவீன அமரர் குளிர்சாதனப்பெட்டியை வழங்கினார். முன்னதாக மன்றத்தின் மாநில பொது செயலாளர் த.சரவணக்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கிராம நாட்டாண்மை, பஞ்சாயத்தார்கள், பரசலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹிட்லர், தி.மு.க.மூத்த பேச்சாளர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மன்ற செய்தி தொடர்பாளர் ஜான்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் கீழையூர் ஜோதிபாசு நன்றி கூறினார்.