பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
திருப்பூர்


அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.

இந்த சூழலில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

இதனைத் தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களுக்கு (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வருகிற அக்டோபர் மாதம் 13-ந்தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு 2,074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதன் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 65.36 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 272 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story