முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை


முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை
x

முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை

திருப்பூர்

தளி,

அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்குகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை கொடுக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை யொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்ததால் அணையின் நீர்இருப்பும் கிடுகிடுவென உயர்ந்து நேற்று காலை 11 மணியளவில் 85 அடியை கடந்தது.அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது. இதையடுத்து அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கினால் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயில் கூடுதலாக உபரிநீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று காலை 11 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 85.11 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,392 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

-


Next Story