இன்னொரு மொழியை கற்றதால் தான் கம்பர் ராமாயணத்தை இயற்றினார்
புதுக்கோட்டை கம்பன் பெருவிழா நிறைவு விழாவில் இன்னொரு மொழியை கற்றதால் தான் கம்பர் ராமாயணத்தை இயற்றினார் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
கம்பன் பெருவிழா நிறைவு
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் பெருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் 10-ம் நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இதில் கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். நிறைவு விழாவில் சிறப்புரையாக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகையில், புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 10 நாட்கள் கம்பன் பெருவிழா நடந்தது பாராட்டுக்குறியது. இன்றைய தினம் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டேன். இதில் ஒத்திவைக்க முடியாத நிகழ்ச்சியாக கம்பன் கழகம் உள்ளது.
கேலி செய்து மீம்ஸ்
கம்பனை கம்பன் கழகம் கொண்டாடுகிறது, மற்ற கழகங்கள் கொண்டாடவில்லை. ராமனை கொண்டாட மறுக்கிறது. என்னை கேலிசெய்து மீம்ஸ் போடுகின்றனர். நண்பர்களால் உயர்வதில்லை எதிரிகளால் தான் உயர்கிறேன். இன்னொரு மொழியை கற்றதால் தான் கம்பர் ராமாயணத்தை இயற்றினார். தமிழிசையை இந்தி இசை என்று சொல்கின்றனர். தாய்மொழியை சரியாக பேச முடியாதவர்கள் பேசுகின்றனர். இந்த உலகம் இருக்கும் வரை கம்பராமாயணம் இருக்கும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து கம்பனை கவிச்சக்கரவர்த்தியாக்கியது நேர்மறை பாத்திரங்களா? எதிர்மறை பாத்திரங்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், தென்னக ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் புரட்சிக்கவிதாசன், ஊர்க்காவல்படை முன்னாள் மண்டல தளபதி மணிவண்ணன், ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன், மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் அசரப்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கம்பன் கழக இணை செயலாளர் காடுவெட்டி குமார் நன்றி கூறினார்.