திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்
நெல்லை சந்திப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்
நெல்லை சந்திப்பு கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்சை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
நேற்று காலையில் அந்த ஆம்புலன்சை சுத்தம் செய்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது ஆம்புலன்சின் கீழ் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து முருகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் ஆம்புலன்சின் பெரும் பகுதி தீயில் கருகியது.
இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆம்புலன்சுக்கு மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.