லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி
வேலூரில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூரில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வீட்டிற்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இதையடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் உதவியுடன் கிருஷ்ணகிரி நோக்கி அழைத்து சென்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது.
நோயாளி பலி
இந்த விபத்தில் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சந்திரசேகர் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், சந்திரசேகருக்கு மேலும் சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அவரை சொந்த ஊருக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய அதிர்ச்சியில் சந்திரசேகர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.