அமெட் பல்கலைக்கழகத்தில் தென் இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிர் கபடி போட்டியின் நிறைவு விழா
நிறைவு விழாவில் அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் நாசே. ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் (Association of Indian Universities-AIU, New Delhi), சார்பாக, தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிருக்கான கபடி போட்டியை (2022-23) டிசம்பர் 21ல் தொடங்கி டிசம்பர் 23 வரை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடல்சார் கல்விக்கென நிறுவப்பெற்ற முன்னோடியான மற்றும் முதன்மையான பல்கலைக்கழகமான அமெட் (AMET) நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்தியது.
ஆண்டுதோறும் நடைபெறும் மெகா விளையாட்டு நிகழ்வான இந்த கபடிப் போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 84 பல்கலைக்கழகங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் 21ல் தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற்ற போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மங்களூர் பல்கலைக்கழகம், ஆகிய அணிகள் அரியானாவில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த நான்கு அணிகளில் இறுதிச் சுற்றில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற மங்களூர் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றன. Fair Play விருதினை கேரளா பல்கலைக்கழகம் வென்றது. சிறந்த தடுப்பாட்ட (Best Defender) வீராங்கனையாக அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலக்கியா தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ரைய்டர் (Best Raider) வீராங்கனையாக மங்களூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். அனைத்திலும் சிறந்த வீராங்கனையாக (All Rounder) பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தீபா தேர்வு செய்யப்பட்டார்.
நிறைவு விழாவில் அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் நாசே. ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் நிறைவுரையாற்றினார். அமெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி சுசீலா ராமச்சந்திரன், வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பாிசுக்கோப்பைகளை வழங்கினார்.
அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், அகில இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான கர்னல் டாக்டர் ஜி.திருவாசகம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் சார்பில் போட்டியின் கண்காணிப்பாளராக பங்கேற்ற முனைவர் அஜீத்மோகன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.
அமெட் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ம.ஜெயப்பிரகாஷ்வேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள், நடுவர்கள், போட்டி அமைப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். அமெட் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறை இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியது.