தேவூர் பகுதியில், ஒரு கிலோ 6 ரூபாய்க்கு கொள்முதல்: வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைசெடிகளிலேயே பறிக்காமல் விடும் அவலம்
தேவூர்
தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ 6 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், வெண்டைக்காய்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
வெண்டைக்காய் சாகுபடி
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளான மூலப்பாதை, ஒக்கிலிப்பட்டி, கோணக்கழுத்தானூர், பூமணியூர், குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், சென்றாயனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, செட்டிபட்டி, மோட்டூர், தண்ணித்தாசனூர், கல்வடங்கம், காவேரிப்பட்டி, அம்மாபாளையம், மயிலம்பட்டி, வட்ராம்பாளையம், ஒடசக்கரை, சோழக்கவுண்டனூர், வெள்ளாள பாளையம், கோனேரிபட்டி, பொன்னம்பாளையம், மேட்டுப்பாளையம், கொட்டாயூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் தற்போது விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைச்சல் அடையும் வெண்டைக்காய்களை மூலப்பாதை, பூமணியூர், காவேரிப்பட்டி, குள்ளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, கோனேரிப்பட்டி, உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிண்டிகேட் மையம் அமைத்து கேரள வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது வழக்கம் ஆகும்.
துபாய்க்கு ஏற்றுமதி
இந்த வெண்டைக்காய்களை கேரள வியாபாரிகள் சரக்கு லாரிகள், வேன்கள் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு ரகம் வாரியாக பிரிக்கின்றனர். பின்னர் அவற்றை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்வதுடன், துபாய்க்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்கின்றனர்.தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெண்டைக்காய் எளிதில் வாடிவிடும் என்பதால் அவற்றை குளிர்பதனப்படுத்தி ஏற்றுமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் உள்ளூர் மார்க்கெட்டுகளிலும் சில நாட்களில் வெண்டைக்காய்களை விற்பனை செய்யாவிட்டால் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
6 ரூபாய்க்கு விற்பனை
இதன்காரணமாக கேரள மாநிலத்தில் வெண்டைக்காய் நுகர்வு குறைந்துள்ளது. இதனால், தேவூர் பகுதிக்கு வரும் கேரள மாநில வியாபாரிகள் வெண்டைக்காய்களை குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும் தேவூர் பகுதியில் கடந்த மாதம் கிலோ ரூ.20 வரை வெண்டைக்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் உள்ளூர் வியாபாரிகளே 6 ரூபாய்க்கு தான் தற்போது கொள்முதல் செய்கின்றனர். மேலும் சில்லறை விலையில் கூட 8 ரூபாய் என்ற வீதத்தில் தான் வெண்டைக்காய் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நுகர்வு குறைவு காரணமாக தேவூர் பகுதிக்கு வரும் கேரள வியாபாரிகளும் வெண்டைக்காய் கிலோ 6 ரூபாய்க்கே கொள்முதல் செய்து வருகின்றனர். விலை குறைவால் இந்த பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக விவசாயிகள், கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி வெண்டைக்காயை பறித்து விற்பனை செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என்பதால் வெண்டைக்காயை பறிக்காமல் செடிகளிலேயே விவசாயிகள் பலர் விட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே வெண்டைக்காய்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.