வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி
கடலூரில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.3-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.
ரெட்டிச்சாவடி:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதம் பெய்த மழையால் கடலூருக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடலூரில் கடந்த 2 மாதமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்திருந்த விவசாயிகள், லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரராக ஆனவர்களும் உண்டு.
விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள், குழம்பில் தக்காளிக்கு பதிலாக புளியை கூடுதலாக சேர்த்துக்கொண்டு சமாளித்தனர். பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி வழங்கப்படவில்லை.
காய்கறிகள் விலை குறைந்தது
தற்போது அண்டை மாநிலங்களில் மழை குறைந்துள்ளதால் கடலூருக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ரூ.36-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.40-க்கும், கேரட் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இஞ்சி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
இந்த நிலையில் வரலாறு காணாத அளவில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். நேற்று ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருப்பதாலும், வரத்து அதிகமாக இருப்பதாலும் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கிலோ ரூ.3-க்கு கொள்முதல்
இது குறித்து நாணமேடு விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பல ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளோம். முறையாக நீர் பாய்ச்சி, உரம் வைத்து பேணியதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாபாரிகள் எங்களிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் 3 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இது வெண்டைக்காய் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கள் வைத்து வெண்டைக்காய் பறிப்பவர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவி்த்தனர்.