நெல்லையில் பராமரிப்பு இன்றி கிடக்கும் அம்மா உணவகங்கள்; சுகாதாரத்தை பேண பொதுமக்கள் வலியுறுத்தல்
நெல்லையில் அம்மா உணவகங்கள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. இதனை சீரமைக்கவும், சுகாதாரத்தை பேணவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது ஏழை, எளியோர், கூலி தொழிலாளர்கள் குறைந்த விலையில் உணவு வாங்கி தங்கள் பசியை போக்கிக்கொள்ள கொண்டு வரப்பட்டது தான் அம்மா உணவகங்கள்.
10 அம்மா உணவகங்கள்
நெல்லை மாநகரில் மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் நிறுவப்பட்டன. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், தச்சநல்லூர், டவுன் தொண்டர் சன்னதி, வையாபுரி நகர், மேலப்பாளையம் போலீஸ் நிலைய ரோடு, அரசு ஆஸ்பத்திரி அருகில், பாளையங்கோட்டை மார்க்கெட், அம்பேத்கர் நகர், திம்மராஜபுரம், பேட்டை மெயின் ரோடு ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உணவு கொண்டு வரப்பட்டு அம்மா உணவகம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அம்பை, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சி பகுதியிலும் தலா ஒரு அம்மா உணவகம் செயல்படுகிறது.
நெல்லையில் ஒவ்வொரு உணவகத்தையும் மகளிர் சுயஉதவிக்குழுவினரே நடத்துகின்றனர். ஒவ்வொரு உணவகத்துக்கும் 12 பெண்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக சமையல் செய்து, பொதுமக்களுக்கு உணவு வழங்குகின்றனர். காலையில் 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம் 5 இட்லிகள் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்படுகிறது.
பராமரிப்பு இல்லை
தற்போது அம்மா உணவக கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. மேலப்பாளையம் ஆஸ்பத்திரி அருகே உள்ள உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து, சாப்பிட வருவோர் தலையில் விழும் வகையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரேயொரு மின்விசிறி மட்டுமே ஓடுகிறது. மற்றவை காட்சிப்பொருட்களாகவே உள்ளன.
மேலும், பெரும்பாலான உணவகங்களில் கை கழுவும் தொட்டிகள், நல்லிகள் இன்றியும், தண்ணீர் இன்றியும் கழிவுப்பொருட்களை போட்டு வைக்கும் இடமாக மாறிவிட்டன. 'ஆர்.ஓ. சிஸ்டம்' எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் பாளையங்கோட்டை மார்க்கெட் உணவகத்தில் சாதாரண உப்பு தண்ணீரே வழங்கப்படுகிறது. மேலப்பாளையம் உணவகத்தில் மாநகராட்சி குடிநீரை குடங்களில் எடுத்து வந்து வழங்குகின்றனர். எனவே, ஆட்சி மாறியதும் காட்சியும் மாறி விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தரமான உணவு
ஏழை-எளியவர்கள், தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் அட்சய பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரத்தை பேண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
தச்சநல்லூர் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட புளியம்பட்டியை சேர்ந்த தனியார் ஸ்கேன் நிறுவன ஊழியர் கணேசன் கூறுகையில், ''வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வராத ஒரு சில நாட்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவேன். இங்கு இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று அனைத்தும் சுவையாக, தரமாக உள்ளது'' என்றார்.
மேலப்பாளையம் ஆஸ்பத்திரி அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட கடை ஊழியர் அக்ரம் கூறுகையில், ''நான் கல்லூரியில் படிக்கும்போது இங்கு வந்து சாப்பிடுவேன். தற்போது கடையில் வேலை செய்வதால் அவ்வப்போது வருவேன். இங்கு சாப்பாடு நன்றாக உள்ளது. ஆனால் கை கழுவும் இடம் இல்லை. தரமான குடிநீர் இல்லை. உணவகத்தை மேம்படுத்த வேண்டும்'' என்றார்.
மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட பீடி கம்பெனி ஊழியர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, ''கை மற்றும் தட்டு கழுவும் இடத்தை மூடி வைத்துள்ளனர். மேலும் சுகாதாரமான தண்ணீர் இல்லை. உணவின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்'' என்றார்.
பாளையங்கோட்டை மார்க்கெட் உணவகத்தில் சாப்பிட்ட ஜெயந்தி கூறும்போது, ''அம்மா உணவகம் பசிப்பிணியை போக்கும் அருமையான இடமாக உள்ளது. வெளியே கடைகளுக்கு சென்று வரும்போது, இங்கு வந்து சாப்பிட வசதியாக உள்ளது. எனவே, அம்மா உணவகத்தை மேம்படுத்தி தொடர வேண்டும்'' என்றார்.
பணியாளர்கள் குமுறல்
இதேபோல் அம்மா உணவக பணியாளர்கள் பலரும் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 1,200 இட்லிகள், தலா 300 சாம்பார், தயிர் சாதம் தயார் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவற்றை தயாரிக்க தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள் கூட்டுறவு மூலமும், காய்கறிகள் மாநகராட்சி மூலமும் வழங்கப்படுகிறது. விற்பனை மூலம் தினமும் மாநகராட்சிக்கு ரூ.3,600 கட்டாயம் செலுத்த வேண்டும்.
டவுன் தொண்டர் சன்னதி அருகில் உள்ள உணவகத்தில், கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதாலும், எதிரே உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்போதும் வியாபாரம் சுமாராகவே உள்ளது. குறிப்பாக முகூர்த்த நாட்களில் மதிய நேரம் இங்கு யாரும் சாப்பிட வருவது இல்லை. அந்த நாட்களில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் விகிதாச்சாரப்படி சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்து முழுதொகையையும் மாநகராட்சிக்கு செலுத்துகிறோம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், முன்பு ஒரு உணவகத்துக்கு மாதம் 20 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது'' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
சம்பள உயர்வு தேவை
மகளிர் சுயஉதவிக்குழு செயலாளர் சந்தனமாரி உள்ளிட்ட பணியாளர்கள் கூறுகையில், ''நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தபோது ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.325 ஆக உயர்த்துவதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதை அமல்படுத்த வேண்டும். மேலும் இட்லி மாவு அரைக்க நவீன கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையல் பாத்திரங்கள், பொருட்கள் உள்ளிட்டவை புதிதாக வழங்க வேண்டும்'' என்றனர்.