பகவதி அம்மன் கோவிலில் வேங்கை மர சிலை பிரதிஷ்டை
நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சி குட்டப்பாளையம் கிராமத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது.. இந்த கோவிலில் புதிதாக வேங்கை மரத்தில் செய்யப்பட்ட பகவதி அம்மன் சிலை பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. காலை 6 மணிக்கு 3 கால சிறப்பு மகா யாக வேள்வி பூஜையும், பின்னர் பகவதி அம்மன் சிலைக்கு கண் திறக்கப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடைபெற்றது.
முடிவில் காலை 9 மணிக்கு பல்லக்கில் பகவதி அம்மன் திருவீதி உலா தொடங்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவில் பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.