அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேர் கைது


அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேர் கைது
x

ஆரணியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை

ஆரணி கொசப்பாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பட்டு சேலை வியாபாரியும், ரியல் எஸ்டேட் உரிமையாளரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அவை தலைவராக இருந்தவருமான கோதண்டம் (வயது 68) என்பவர் கடந்த 5-ந் தேதி திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் 7-ந் தேதி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோதண்டத்தை தேடி வந்தனர்.

அவரது செல்போன் உரையாடல்கள் சைபர் கிரைம் பிரிவு மூலம் பெறப்பட்டது. ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி.புகழ், தயாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கார்த்திகேயன், சுரேஷ், ராஜீவ்காந்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செல்போன் உரையாடல்களை கண்காணித்தபோது கோதண்டத்தை நிலம் சம்பந்தமாக கடத்தி கொலை செய்ய கூலிப்படை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணையில், கோதண்டம் ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெலுங்கு-கங்கை கால்வாய் பகுதியில் அடையாளம் தெரியாத பிணமாக கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை செய்து கடந்த 7-ந் தேதி புதைக்கப்பட்டது தெரிந்தது.

ரூ.10 லட்சம் பேரம்

மேலும் ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரின் மகன் சரவணன் (38), அவரது கார் டிரைவரான ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற நாகேசின் மகன் குமரன் இருவரும் சேர்ந்து சென்னை பகுதியைச் சேர்ந்த நேருஜி, குட்டி என்ற தணிகாசலம் மூலமாக ஆந்திரா பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை கொண்டு கோதண்டத்தை கொலை செய்ய ரூ.10 லட்சம் பேரம் பேசி அவர்களிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து சரவணன், குமரன், நேருஜி, தணிகாசலம் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கடந்த 15-ந் தேதி கைது செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

இவ்வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (34) சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (31) கும்மிடிப்பூண்டி தாலுகா தானிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் (24) ஆகிய மூவரும் தலைமறைவாக இருந்தனர்.

தனிப்படை போலீசார் அவர்களது செல்போன் உரையாடல்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஆரணி பகுதியில் வழக்கு நடந்து வருவதால் முக்கிய பிரமுகரை சந்திக்க அவர்கள் வருவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் ஆரணி - சேவூர் பைபாஸ் சாலை அருகே 3 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் ஆரணி கோா்ட்டில் ஆஜர்படுத்தினர். மூவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.


Next Story