தேனியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, தேனி பங்களாமேட்டில் அ.ம.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் கதிர்காமு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க. அரசை கண்டித்தும், சொத்துவரி, மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் காசிமாயன் நன்றி கூறினார்.