அ.ம.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானம் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இருக்கப் போகிறது என்று தொண்டர்களுக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
செயற்குழு - பொதுக்குழு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் ஜெயலலிதாவின் லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நமது சபதத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன். இயக்கம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இயக்கத்தின் இதயம் போன்ற பொதுக்குழு கூட்டம் இப்படிதான் நடக்க வேண்டும் என்று, பார் போற்றும் வகையில், முன்னுதாரணமான கூட்டமாக நம்முடைய பொதுக்குழு திகழப் போகிறது.
நம்முடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னையில், ஜெயலலிதா பொதுக்குழு நடத்திய இடத்தில், செயற்குழு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பம்தானே எப்போதும் எனது விருப்பமாக இருந்திருக்கிறது. மற்றபடி, சிலர் கூறுவதைப் போல நாம் யாருக்காகவோ, எதற்காகவோ எல்லாம் சென்னை வானகரத்தில் இப்பொதுக்குழுவைக் கூட்டவில்லை என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
நம்முடைய இயக்கத்தின் பொதுக்குழுவில் மிக முக்கியமான தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்ற இருக்கிறோம். அத்தீர்மானங்கள் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இருக்கப் போகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.